Sunday, September 3, 2017

Pallikudam

இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன
       திருப்புவனம்:தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு
பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் கவனக்குறைவு, கற்பிக்கும் திறன் உள்ளிட்டவை காரணமாக பலரும் தனியார் பள்ளிகளின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களை அருகில் இணைக்கப்படும் பள்ளிகளுக்கு அழைத்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் அடுத்தாண்டு 20 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் மூடப்பட்டு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
திருப்புவனம் ஒன்றியத்தில் 62 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலைப்பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100 பள்ளிகளில் 387 ஆசிரியர்,ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் 6 ஆயிரத்து 414 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தாண்டு திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அழகுடையான் ( 6 மாணவ, மாணவியர்கள்) புளியங்குளம் (9 மாணவ, மாணவியர்கள்), மேலசொரிகுளம் ( 4மாணவ, மாணவியர்கள்) ஆகிய மூன்று பள்ளிகள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம், சத்துணவு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவை மிச்சமாகும் என கருதப்படுகிறது.
இதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் முடிந்து தமிழக அரசுக்கு முடிவு அனுப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: