Sunday, September 3, 2017

Pallikudam

குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும்.

இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்த மாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது.

மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

No comments: